50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானையின் உடல் கண்டெடுப்பு

Byadmin

Dec 24, 2024

சைபீரியாவில் உள்ள யாகுடியா பகுதியில் பெர்மாஃப்ரோஸ்ட் எனப்படும் உறைநிலையில் உள்ள இடத்தில் இருந்து 50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானைக் குட்டியின் உடலை ரஷிய ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.இது பெண் யானை என்று அறியப்படும் நிலையில், இதற்கு ‘யானா’ என்று பெயர் சூட்டியுள்ளனர். உலகில் இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட மாமூத் யானை உடல்களில் இதுவே மிகச் சிறப்பாக பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு முன்னர் 6 மாமூத் யானைகளின் உடல்கள் உலகம் முழுவதும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், 5 ரஷியாவிலும், 1 கனடாவிலும் கண்டெடுக்கப்பட்டன.தற்போது கண்டெடுக்கப்பட்ட யானையின் வயது 1 அல்லது சற்றே அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.யாகுட்ஸ்க் பகுதியில் உள்ள ஃபெடரல் பல்கலையில் வைக்கப்பட்டுள்ள இந்த யானையின் உடல் 180 கிலோ (397 பவுண்டுகள்) எடையும்,120 சென்டிமீட்டர் (நான்கு அடி) உயரம் மற்றும் 200 சென்டிமீட்டர் நீளமும் கொண்டுள்ளது.

இவ்வளவு சிறப்பாக பதப்படுத்தப்பட்ட யானையின் உடல் தங்களை ஆச்சரியப்படுத்துவதாகக் கூறும் ஆய்வாளர்கள் இது ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பு என்று தெரிவித்தனர்.மாமூத் யானையின் உடல் தோண்டியெடுக்கப்பட்ட படாகிகா ஆய்வு மையத்தின் அருகில் இதற்கு முன்னர் மிகப் பழமையான குதிரை, காட்டெருமை மற்றும் லெம்மிங் எனப்படும் எலியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *