கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தனது பெயரில் மேற்கொள்ளப்படும் பண மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.இன்று (24) பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் குறித்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி என அடையாளப்படுத்தப்படும் நபர் அல்லது குழு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இலக்கு வைத்து சமூக பராமரிப்பு சேவைகளுக்காக பணம் பெற்றுக்கொள்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி முறைப்பாடு செய்துள்ளார்.குற்றப் புலனாய்வுத் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டை வழங்கிய அமைச்சர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.மக்கள் பிரதிநிதியாகவும், பொறுப்பு வாய்ந்த அமைச்சராகவும் இருக்கும் தன்னைப் போன்றவர்களின் பெயரை பயன்படுத்திக் கூட அச்சமின்றி இதுபோன்ற மோசடிகளை செய்து வருகின்றனர் என கூறினார்.