வருடாந்தம் டிசம்பர் 18ஆம் திகதியன்று, அரபு மொழியின் செழுமை மற்றும் அதன் பெறுமையை பறைசாற்றும் விதத்தில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உலக அரபு மொழி தினத்தைக் கொண்டாட ஒன்றிணைகின்றனர். 400 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் 25 நாடுகளில் பேசப்படும் அரபு மொழி வெறும் மொழியாக இல்லாமல், கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் அறிவாற்றலின் கோணங்களில் எல்லைகளை கடந்த ஒரு முக்கிய தூணாக விளங்குகிறது.
அரபு மொழியானது மனிதரின் அழகிய, அறிவார்ந்த மற்றும் ஆன்மீகமான தகவல்களை பரிமாறும் ஆற்றலின் சான்றாகவும் ஊடகமாகவும் விளங்குகிறது. பண்டைய அரபு கவிதைகளின் கவியரங்குகளிலிருந்து பள்ளிவாசல்கள், கட்டிடங்களின் சுவர்களை அலங்கரிக்கும் சிக்கலான எழுத்தணிகள் வரை, அரபு மொழி பல நூற்றாண்டுகளாக கலைப் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் கடத்தும் கப்பலாக இருந்து வருகிறது.