விமான நிலையத்தில் தாக்கப்பட்ட இலங்கையர்

ByEditor 2

Dec 9, 2024

தமிழகத்தின் சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த நான்கு பயணிகள் தாக்கப்பட்டதனால் பதற்ற நிலையில் ஏற்பட்டிருந்தது.

குறித்த இலங்கையர்களிடம் விசாரணை என்ற போர்வையில் சுங்க அதிகாரிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயணிகள் மீது முறைப்பாடு செய்த சுங்க அதிகாரிகள், அவர்களை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்

விமான நிலைய தகவலுக்கமைய, ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானத்தில் சென்னை வந்த நான்கு பயணிகளை, துணை ஆணையர் சரவணன் தலைமையிலான சுங்கக் குழுவினர் விசாரணைக்காக தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பயணிகளில் ஒருவரான சலீம், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தாங்கள் மொத்தமாக ஆடைகள் வாங்க சென்னைக்கு வரும் வர்த்தகர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுடனான வாக்குவாதம் அதிகரித்ததால் இரு குழுக்களும் கைகலப்பில் ஈடுபட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நால்வர் அடங்கிய குழுவினர் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறி வீடியோ பதிவு செய்தனர்.

கொலை மிரட்டல்
“நாங்கள் சென்னை விமான நிலையத்தில் இருக்கிறோம். இங்குள்ள சுங்கத்துறை அதிகாரிகளால் நாங்கள் கடுமையாக தாக்கப்பட்டோம். இந்த வீடியோவை இலங்கை தூதரகத்திற்கு அனுப்புங்கள்” என்று இலங்கை பயணி ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிலைமை மோசமடைந்ததால், அதிகாரிகள் பயணிகளை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பயணிகள் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தங்கள் பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி, பொலிஸாரிடம் சுங்க அதிகாரிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இலங்கையர்களிடம் மேலதிக விசாரணைகளை சென்னை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *