சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் கலாநிதி தவ்ஃபிக் அல்-ரபியா, சவுதி அரேபியாவின் இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்களை ரியாதிலுள்ள ஹஜ் அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தார்.
இவ்விஜயத்தின் போது, சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை வரவேற்றதுடன், வருடாந்த ஹஜ் காலங்களில் இலங்கை ஹஜ் தூதுக்குழுக்கள் பல வருடங்களாக வழங்கிய தளராத ஒத்துழைப்பிற்கு அமைச்சர் அல்-ரபியா தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த தூதுவர் அமீர் அஜ்வத், இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்கள் தங்கள் மத சடங்குகளை அமைதியாகவும் வசதியாகவும் நிறைவேற்றுவதற்கு வசதிகளை எற்டுத்தியதற்கு பல தசாப்தங்களாக சவூதி அரேபியா அரசாங்கம் குறிப்பாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு வழங்கிய அலாதியான ஆதரவிற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும் எதிர்வரும் காலங்களில் இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவர்களின் மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வசதியாக பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் அமைச்சர் அல்-ரபியாவுடன் தூதுவர் அவர்கள் கலந்துரையாடினார்.கலாநிதி தவ்ஃபிக் அல்-ரபியா , அவரது தற்போதைய பதவிக்கு முன், சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சராகவும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அவர் கைத்தொழிற் பேட்டை மற்றும் பிராந்திய தொழில்நுட்பத்திட்கான சவுதி ஆணையத்தின் (Modon) பொது இயக்குநராகவும், தேசிய தொழில்துறை கூட்டுத்திட்டத்தின் மேற்பார்வையாளராகவும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.குறித்த நிகழ்விற்கு ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர்/தலைவர் மொஹமட் அனஸ் அவர்கள் தூதுவர் அவர்களுடன் கலந்துக் கொண்டார்.இலங்கைத் தூதரகம்,ரியாத்,03.12.2024.