மாலாவும் வள்ளியும் ஒரே வயசு சேக்காளிங்க. ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தரு அம்புட்டு நெருக்கம்
பள்ளிக்கொடத்துக்க்குப் போகும்போது ரெண்டுபேரும் ஒண்ணாத்தான் போவாக.
யாரு மொதல்ல கெளம்புறாங்களோ அவங்க மத்தவங்களைப்போயி கூட்டிட்டுக் கெளம்புறதுதான் வழக்கம். ரெண்டுபேரும் வேறவேற தெரு மாலா கொஞ்சம் வசதி வள்ளி சாதாரணத்துக்கும்கொஞ்சம் கம்மிதான் வசதியில.
வள்ளி அந்தத்தெருவுக்குள்ள வரும்போதே செல கண்ணுக யோசிக்கும் இந்தப்புள்ளைக்கி என்னா சோலி நம்ம தெருவுலன்னு அதை யெல்லாம் வள்ளி கண்டுக்கிறது இல்ல.
ரெண்டுபேரும் பள்ளிக்கொடம் போகும்போது மாலா பைய வள்ளி தூக்கிக்கிவா. ஏன்னா மாலா கொஞ்சம் நோஞ்சான். ஆளு பாலீசா இருந்தாலும் அவளால முடியாது மூச்செரைக்கும்
அதுக்கு லஞ்சமா மாலா வீட்டுல இருந்து பலகாரமெல்லாம் கொண்டாந்து ”திண்ணு புள்ளன்னு” குடுக்கும். அது ரொம்ப டேஸ்ட்டா இருக்குறதுனால வள்ளிக்கும் புடிக்கும்
அதேமாதிரி மாலாவோட நோட்டுல வீட்டுப்பாடமெல்லாம் எழுதிக்குடுக்குறது வள்ளிதான். என்னாலமுடியலடின்னு சொன்னவன்ன வள்ளி வீட்டுக்கு எடுத்திட்டுப் போயி எழுதிக்குடுப்பா
வகுப்புலயும் பக்கத்து பக்கத்து சீட்டுதான் குசு குசுன்னு பேசி ரொம்பத்தடவ டீச்சர்கிட்ட அடி வாங்கிருக்காக ரெண்டுபேருமே.
மாலாசேட்டை பண்ணிட்டுச் செலநேரம் அதுக்காக முன்வந்து வள்ளி அடி வாங்கி ருக்கா.அப்ப எல்லாம் மாலா கண்ணும்கசியும் ”மன்னிச்சிக்கடிம்பா”
வள்ளிசொல்லுவா
“அதெல்லாம் பழகிப்போச்சு.எங்காத்தா அடிக்கிற அடில பாதிகூட இதுகெடையாது”ம்பா அடிவாங்கும்போது ஓவரா ஆக்சன் குடுத்து தப்பிச்சிக்கிவா. அதெல்லாம் மாலாவுக்குத்தெரியாது
ஏதாவது கலியாணம் காச்சின்னு மாலா வீட்டுல இருக்குறவுக கெளம்புனா மாலா வயத்த வலிக்குதுன்னு டூப் விட்டுட்டுவீட்டுல தங்கிடுவா. நைசா வள்ளிய வரச்சொல்லி ரெண்டும் சேந்து கூத்தடிக்குங்க.அப்பெல்லாம் வள்ளி சமைப்பா ரெண்டும் திண்ணுபுட்டு சட்டியக் கழுவிகவுத்திடும் .
தாயக்கட்டமும் பல்லாங்குழியும் பாண்டி ஆட்டம் னுதூள் பறக்கும் அம்புட்டும் வெளிய போனவுக வாரதுக்குள்ள முடிஞ்சிடும்
அன்னிக்கி நேரம் சரியில்ல. போனவுக ராத்திரி வாரமுன்னு சொன்னவுக சீக்கிரமே வந்துட்டாக, பூட்டுன வீட்டுக்குள்ள கும்மாளச் சத்தம் கேட்டு ஆர்ரா இதுன்னு பாக்க மாட்டிக்கிச்சு. வள்ளிய ஒருமாதிரி பாத்தாக என்னா புதுப்பழக்கம் வீட்டுக்குள்ள யெல்லாம் வந்துக் கிட்டுன்னு சொன்னாக மாலா வீட்டு ஆளுக மொக மெல்லாம் மாறிப்போச்சு
மக்காநாளு மாலாவீட்டுல இருந்து கூப்புட்டு அனுப்பிருந்தாக வள்ளி போனா அவுக வீட்டுல இருந்த காசக்காணாமாம்
”நீ எடுத்தியான்னு ”கேட்டாக. மாலாவக் காணாம் உள்ள பூட்டி ட்டா களான்னு தெரியல. இவ இல்லன்னா.
அப்ப அசிங்கமா திட்டுனாக நரிக்கி எடம்குடுத்தா கெடைக்கி ரெண்டு வெள்ளாடு கேக்குமாமுன்னு . இவளுக்கு அவமானமாப் போச்சு. அப்புறம் சூடனப்பொருத்தி சத்தியம் பண்ணச்சொன்னாக.
”காச எடுக்கல”ன்னு எரியிற சூடன் மேல சத்தியம் பண்ணிட்டு அழுதுக்கிட்டே வீட்டுக்குப் போனா. அடுத்தநாளு மாலா வள்ளிய பள்ளிக் கொடத்துக்குக் கூப்புடப் போனா. வள்ளியோட அம்மா ”இங்கெல்லாம் வராத . எங்கலால உங்களுக்கு கஸ்டம் வேணா”முன்னு சொல்லிச்சி.
அடுத்தநாளு பள்ளிக்கொடத்துக்கு மாலா போகையில முன்னாடி நொண்டி நொண்டி வள்ளி போய்க்கிட்டு இருந்தா மாலா கூப்புட்டும் காதுல வாங்காதமாதிரி
பள்ளிக்கொடத்துலயும் ஒண்ணும்பேசல
மாலா வலியப்பேசுனா
”மன்னிச்சிருடி எங்க வீட்டுல நடந்ததுக்கு, காசு எதுவும் காணாமப் போகல. வேணுமுன்னு சொல்லிட்டாக”ன்னு சொல்லிட்டு அழுதுக்கிட்டே மடில வுழுகப்போனா.அப்ப வள்ளி அவளத் தள்ளிவிட்டா. ஒரு மாதிரியாகிப் போச்சு மாலாவுக்கு .அப்பத்தான் வள்ளி யோட கால்ல சூடு போட்டிருந்ததைக் காமிச்சா.
”உன் கூடப்பேசக்கூடாதுன்னு எங்கம்மா சூடு வைச்சிருச்சு”ன்னு கண்ணு கலங்கச் சொன்னா.”ஆனா என்னால உன்கூடபேசாம இருக்க முடியாது என்ன இனிமே உங்க வீட்டுப்பக்கம் வரமுடியாது நாம இங்க பேசிக்குவோம்டி ”ந்னு அழுதா
மறுநாள் மாலா பள்ளிக்கொடத்துக்கு வரல வள்ளிக்கு ஒண்ணும் புரியல .தவிச்சிப்போனா.
மூணுநாளு கழிச்சி மாலாவ அவங்க சித்தப்பா கொண்டாந்து விட்டுட்டுப் போனாரு. அவ உள்ள வந்து ஒக்காந்தா.
”ஏண்டி வரல நான் துடிச்சிட்டேன் தெரியுமா என்னாச் சு”ன்னுன்னா. ”
“மூணுநாளா ஜுரம்அதான் வரல”ன்னா. ”பாவம்டி நீன்னா” வள்ளி
அதுக்கு மாலா சொன்னா
” ஜீரம்தான் எங்க வீட்டுக்குத்தெரியும் ஜீரத்தின் காரணம் எனக்குமட்டும்தான் தெரியும்”ன்னா .வள்ளி புரியாமப்பாத்தா
இப்ப மாலா காலக்காமிச்சா.இவளுக்கு மாதிரியே அவகால்லயும் சூடு இருந்துச்சு வள்ளி அழுதுட்டா
“உங்கவீட்டுலயும் போட்டுட்டாகளா”ன்னு கேட்டா.
அப்ப மாலா சொன்னா
“நானே போட்டுக்கிட்டேன் உன் கூட பேசு வேன்னு. என்னாலதான நீ சூடுவாங்குன அந்த வேதன எனக்கும் வேணுமுன்னு போட்டுக் கிட்டேன்”னா.
வள்ளியோகண்ணுல கண்ணீர் ஆறா ஓடிச்சி. மாலாவோட கண்ணுல இருந்தும் இப்ப ஒருதுளிகூட வரல,
வள்ளி மாலாவ அணைச்சிக்கிட்டா ஆறுதலா அப்ப வள்ளி கண்ணுல இருந்து வழிஞ்ச கண்ணீர் மாலா முதுக நனைச்சது
அப்ப சொன்னா மாலா
“நாம நம்மலப் பெத்தவங்களைப்போல இருக்கவேணாம் நாம நாமலாவே இருப்போம்”
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்
சீட்டித்துணிப்பாவடையும்பட்டுப்பாவாடையும்(சிறுகதை)
