இனி அரசியல்வாதிகளின் தலையீடு இருக்காது

Byadmin

Sep 8, 2024

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசாங்கத்தை சுத்தப்படுத்தி, ஆசியாவிலேயே எழுச்சிபெற்ற நாடாக இலங்கையை முன்னேற்றுவோம் எனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க, அரச அலுவலகங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இல்லாது பணியாற்றக் கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொடுப்பதாகவும் நேற்று (06) புத்தளத்தில் தெரிவித்தார்.

புத்தளம் நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

மொரவக்க பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அநுர தனது நண்பர் என்று ரணில் விகரமசிங்க தெரிவித்தாராம். எனது வெற்றி உறுதியாகிவிட்டது என்பதால்தான் ரணில் விக்ரமசிங்க அப்படி கூறியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ரணில் விக்ரமசிங்க என்னை அவரது நண்பன் என்று சொன்னாலும், 21ஆம் திகதி நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மத்திய வங்கியில் நடந்த கொள்ளை பற்றி முறையான விசாரணைகளை நடத்துவோம். எல்.ஆர்.சி காணிகளை பங்கிட்டமை , எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், மதுபானசாலைகளுக்கும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கியமை தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்போம்.

நண்பன் என்று மஹிந்த ராஜபக்ஷவையும், சஜித் பிரேமதாசவையும் சமாளிக்க முடியும். ஆனால், ரணில் விக்ரமசிங்க எங்களை சமாளிக்க முடியாது. அந்த ஆட்சியாளர்களினால்தான் இன்று எமது நாடு இந்தளவு மோசமான அளவுக்கு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்க 12.5 பில்லியன் வரை செலுத்த முடியாத அளவு கடனைப் பெற்றுள்ளார். அதுபோல ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்து ஒரு பில்லியன் டொலரையும் பெற்றுக்கொண்டார்.

எமது ஆட்சியில் இதுபற்றியும் தேடி முறையான விசாரணைகளை முன்னெடுப்போம். இன்று போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் தாங்கள் தோல்வியடைந்து விடுவோம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

யாருடைய தயவிலும் எமக்கு வாக்கு தேடும் நிலையில் எமது கட்சி இல்லை. 21ஆம் திகதி திசை காட்டி சின்னத்திற்கு நீங்கள் வாக்களியுங்கள். இந்த நாட்டை நாங்கள் சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம். உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நல்லதொரு எதிர்காலத்தை நாம் பெற்றுக்கொடுப்போம்.

இலங்கை வரலாற்றில் மக்கள் நல்ல தீர்மானத்தை எடுக்கும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் ஒருபக்கம் மஹிந்தவை வெல்ல வைப்பதற்காகவும், அடுத்த முறை ரணிலை வெல்ல வைப்பதற்காகவும் மாத்திரமே முயற்சிகள் எடுக்கப்படும். ஆனால், இந்த முறைதான் அந்த இரண்டு பேரின் கைகளில் இருந்த அதிகார பலத்தை தேசிய மக்கள் சக்தியின் கைகளுக்கு எடுக்கும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றதும், ஒன்றரை மாதத்தில் பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்துவோம். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இப்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் 150 பேர் அளவில் அடுத்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வீட்டுக்குதான் செல்ல வேண்டி வரும்.

எமது ஆட்சியில் 25 பேரைக் கொண்ட விஞ்ஞான ரீதியிலான அமைச்சரைவையை அமைப்போம். இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். 25 அமைச்சுகக்களுக்கும் 25 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படும். புதிய அமைச்சரவை ஒன்று கூடி ஏனைய திணைக்களங்களுக்கு உரிய பிரதானிகளை நியமிப்போம்.

அரச பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ள குடும்ப உறவினர்களை வீட்டுக்கு அனுப்பி தகுதியானவர்களை அந்த பதவிகளில் அமர்த்துவதற்கு தேர்தலில் வெற்றிபெற்ற அடுத்த நாளே நடவடிக்கை எடுப்போம். எமது வெற்றிக்கு பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஆளுநர்கள் மட்டும் வீட்டுக்குப் போவதில்லை. அஅரச உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் சேர்ந்துதான் வீட்டுக்குப் போக வேண்டும்.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வோம். வாகன கொள்வனவுக்கு வழங்கப்படும் வரிச் சலுகை அற்ற அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும். அமைச்சர்களுக்கு அரச உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்படாது. மின்சார கட்டணம், நீர்க்கட்டணம் வழங்கப்பட மாட்டாது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சர்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லை எனில் அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட மாட்டாது.

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படுவதுடன், மீன்பிடி உபகரணங்களுக்கு விதிக்கப்படும் வரியை நீக்கவும் நடவடிக்கை எடுப்போம். மேலும், இறால் பண்ணைகளை விரிவுபடுத்தி அதற்குத் தேவையான அத்தனை வசதிகளையும் பெற்றுக்கொடுக்க எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

அதுபோல, சிறிய குளங்களை புனரமைத்துக் கொடுத்து, குறைந்த விலையில் உரங்களையும் பெற்றுக்கொடுத்து, நல்ல விலையில் நெல்லையும் நாமே கொள்வனவு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும்; நடவடிக்கை எடுப்போம்.

எமது நாட்டில் அரிசி உற்பத்திக்கு தேவையான அனைத்து வளங்களும் உண்டு. ஆனால், விவசாயிகளின் நலன்களை கவனிக்காமல், ஒரு திட்டத்தை வகுக்காமல் வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்கிறார்கள்.

ஆனால், எமது அரசாங்கத்தில் வெளிநாட்டவர்களுக்கு என்று சில வகை அரிசிகளை மாத்திரம் இறக்குமதி செய்து, ஏனைய அனைத்தும் இங்கேயே உற்பத்தி செய்ய அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. உப்பைக் கூட வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்கிறார்கள்.

வாழச்சேனை, எம்பிலிப்பிடிய கடதாசி தொழிற்சாலைகளை இழுத்து மூடிவிட்டார்கள். கந்தளாய், இங்குறானை சீனித் தொழிற்சாலைகளை மூடிவிட்டார்கள். புத்தளத்தில் சீமெந்து தொழிற்சாலை இருந்தது. அதனையும் விற்பனை செய்துவிட்டார்கள்.

யாழ். காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை இருந்தது அதனையும் மூடிவிட்டார்கள். பரந்தனில் இரசாயன உற்பத்திசாலை இருந்தது அதனையும் மூடினார்கள். வெயாங்கொட, பூகொட, மத்தேகொட ஆகிய பகுதிகளில் நெசவு உற்பத்திசாலைகள் இருந்தது அதனையும் காரம் இன்றி மூடிவிட்டார்கள்.

இவ்வாறு நாட்டில் காணப்படும் பிரதான தொழிற்சாலைகளை மூடி நாட்டை கீழே தள்ளிவிட்டார்கள். இதனால் நாட்டுக்கு கிடைக்கவிருந்த வருமானங்களை இல்லாமல் ஆக்கினார்கள். இந்த நாடு வளம் பெறவில்லை. ஆனால், அவர்கள் மாத்திரம் நன்றாகவே அனைத்து வழிகளிலும் வளம் பெற்றுக் கொண்டார்கள்.

இலங்கையில் என்ன வளம் இல்லை. எல்லா வளங்களும் இருக்கும் இந்த நாட்டை முறையாக வளப்படுத்த தெரியாத ஆட்சியாளர்களிடமே மக்கள் இந்த நாட்டை இவ்வளவு காலமும் நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். எமது நாட்டில் உற்பத்தி செய்வதை விட, வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கே ஆட்சியாளர்கள் விரும்பினார்கள். காரணம் அதில்தான் அதிக வருமானம் கிடைக்கும். அதிக கமிஷன் பெறலாம்.

உதாரணமாக, இந்தியாவில் இருந்து முட்டை ஒன்றை இறக்குமதி செய்வதாயின் ஒரு முட்டைக்கு எட்டு ரூபா கமிஷன் கிடைக்கும். ஒரு கோடி முட்டை இறக்குமதி செய்தால் எட்டு கோடி ரூபா கமிஷனாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு கிடைக்கும். இதனால்தான் சீனி, பருப்பு, வெங்காயம், உப்பு என அனைத்து பொருட்களையும் எமது நாட்டில் உற்பத்தி செய்வதை விட இறக்குமதி செய்வதில் அரச தலைவர்களும், அமைச்சர்களும் அதிக ஆர்வத்தை காட்டினார்கள்.

இது ஆட்சியாளர்களுக்கு இலாபத்தைக் கொடுத்தது. ஆனால், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் நஷ்டமாகும். எனவேதான் இதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு நாங்கள் அதிகாரத்தை கேட்கிறோம். உற்பத்திகளுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி கீழே வீழ்ந்துள்ள இந்த நாட்டை நாம் ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்புவோம்.

அதுபோல இந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவந்தவர்களையும், ஊழல், மோசடிகளை முன்னெடுத்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக பாகுபாடின்றி விசாரணை நடத்தப்படும். நீதிமன்றத்தின் ஊடாக தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் திருடிய சொத்துக்களை அரசுடமையாக்குவோம்.

இந்த நாட்டில் அரசியல் தலையீடுகள் இல்லாத அரச தொழிலை முன்னெடுப்பதற்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொடுப்போம். அரச அலுவலகங்கள் எப்போதும் சுதந்திரமாகவே செயற்பட வேண்டும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *