இந்திய, இலங்கை கூட்டு அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துவதில் கவனம்

Byadmin

Jun 21, 2024

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தித் துறை தொடர்பான கூட்டுத் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் இடம்பெற்ற இருதரப்புக் கலந்துரையாடலில் இந்த விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
எரிசக்தி இணைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் மேம்பாடு, எல்.என்.ஜி விநியோகம், இரு நாடுகளுக்கு இடையே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோகக் குழாய், எரிபொருள், எரிவாயு ஆய்வுத் திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பால் உற்பத்தியை ஊக்குவிக்க, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் செயல்திறன் மற்றும் உர உற்பத்தி தொடர்பான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
திருகோணமலையின் அபிவிருத்திக்காகவும், காங்கேசன்துறை துறைமுகத்தின் விரிவாக்கத்திற்காகவும் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் யாழ் விமான நிலையம் மற்றும் கொழும்பு இரத்மலான விமான நிலையம் ஆகியவற்றின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலின் முதற்படியாக, இலங்கைக்கான தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை துரிதப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில், வெளியுறவுத் துறை அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விவசாயம், தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தேசிய பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக் குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *