இலங்கையில் முதன்முறையாக கழுதைப் பால் உணவுகள் – சுவாரசியமான விபரங்கள்

Byadmin

Jun 19, 2024

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் மருத்துவ பீடம் என்பன இணைந்து கழுதைப்பாலில் இருந்து பாலாடைக்கட்டி (Cheese) உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று ஆண் கழுதைகள், மூன்று பெண் கழுதைகள் மற்றும் ஒரு கழுதைக்குட்டி மன்னாரில் இருந்து பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்திற்கு இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி அசோக தங்கொல்ல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கிளியோபாட்ரா போன்ற அழகிகள் தங்கள் அழகை மேம்படுத்த கழுதைப்பாலை பயன்படுத்தியதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அந்த பாலை அடிப்படையாகக் கொண்டு வாதநோய்களை தடுக்கும் தைலங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மருத்துவ பீடத்தை தொடர்பு கொண்டு ஆராய திட்டமிட்டுள்ளதாகவும் தங்கொல்லா தெரிவித்தார்.

கழுதைப்பாலின் ஊட்டச்சத்து தாய்ப்பாலைப் போன்றே உள்ளது என்றும் அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டிக்கு உலகில் அதிக தேவை உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்ட நன்கு வளர்ந்த கழுதை ஒரு நாளைக்கு சுமார் 5 கிலோ புல் சாப்பிடுவதாகவும், அவற்றிலிருந்து தினசரி பெறக்கூடிய பாலின் அளவு ஒரு மாட்டிடமிருந்து பெறப்பட்டும் பாலின் அளவைவிட மிகக் குறைவு என்றும் பேராசிரியர் கூறினார்.

பொதுவாக புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் காணப்படும் இந்த விலங்கினம் தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் விபத்துக்களால் கழுதைகள் இறக்கும் சம்பவங்கள் பல பதிவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், கால்நடை மருத்துவ பீடத்தின் முயற்சியின் கீழ், கழுதைகளின் ஆயுட்காலம், கருவுற்ற காலம், கன்று ஈன்ற பின் பால் கறக்கும் காலம் ஆகியவற்றை கண்டறியும் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் பேராசிரியர் கூறினார்.

கல்பிட்டி கழுதைகள் பலநூறு வருட வரலாற்றைக் கொண்ட ஒரு விலங்குப் பிரிவாகும், இலங்கைக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கும் புத்தளம் பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்ட கழுதைகள் பின்னர் கல்பிட்டி கழுதைகளாக மாறியுள்ளன.

கழுதைப்பாலை அடிப்படையாக கொண்டு பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் இந்த தொன்மையான கழுதைகளை பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட திட்டம் தேவை என விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

மேலும், சில பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், இன்னும் பல ஆண்டுகளில் கழுதைகள் அழிந்துவிடும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கல்பிட்டி வனப் பாதுகாப்பு அதிகாரி உபாலி குமாரதுங்க கூறுகையில், விலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் 11 (a) பிரிவின்படி கழுதை வீட்டு விலங்காக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மேற்படி சட்டம் கழுதைகளுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *