வாகன இறக்குமதி திட்டத்தை தயாரிப்பதற்கான குழு நியமனம்

Byadmin

Jun 15, 2024

எதிர்காலத்தில் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், நாட்டின் நிதி விவகாரங்களில் வழிகாட்டியாக மாறியுள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் பல நிதி விடயங்கள் கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்படும் என குறிப்பிட்டார்.
இதன்படி, வாகன இறக்குமதியானது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான வரைபடத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம்  சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த வரைபடத்திற்கு அமைய பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் இருந்து குறிப்பிட்ட முறையின் கீழ் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
அந்த குறிப்பிட்ட திட்டத்தை தயாரிப்பதற்காக, நிதி அமைச்சகத்தின் வர்த்தக மற்றும் கொள்கைத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், மத்திய வங்கி, வாகன இறக்குமதியின் போது புதிய மற்றும் பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்யும் இரு குழுக்களின் பிரதிநிதிகள், கைத்தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு உள்ளிட்ட வாகன இறக்குமதியின் போது தாக்கம் செலுத்தும் அனைத்து குழுக்களையும் உள்ளடக்கி இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், இந்த வாகனங்களின் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது, ​​பொது மக்களின் போக்குவரத்துத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் மாற்றாகப் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களும் அதற்கு பின்னர் சொகுசு வாகனங்கள் மீதான கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளத்தப்படும் என கூறிய இராஜாங்க அமைச்சர், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *