புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள்

Byadmin

Jun 12, 2024

வடமேல் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (11) மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்  ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர்களாக சாந்த பண்டார, டீ.பி.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன,  மஞ்சுளா உள்ளிட்ட  அரசியல் பிரமுகர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் ஏக்கநாயக்க உட்பட அரச உயர் அதிகாரிகள், குருநாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித்  வெதமுல்ல உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், பெருந்தெருக்கள், காணி, வீடமைப்பு,  உள்ளிட்ட பல்வேறு துறைகளின் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் துரிதகதியில் தீர்வுகளை வழங்குவது குறித்து ஆராயப்பட்டது. 
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியாவது, 
அரசியல் வேறுபாடுகள் மற்றும் அரசியல் சார்பு நிலைப்பாடுகளுக்கு அப்பால் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
அத்துடன், பொதுமக்களுக்குச் சேவையாற்றும் விடயத்தில்  ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு அதிகாரியும், எந்தநேரத்திலும் அதுதொடர்பில் தன்னைச் சந்திக்க  வர முடியும் என்றும், அவ்வாறான  சிக்கல்களைத் தீர்த்துவைப்பதற்கு நான் எப்போதும் தயாராக உள்ளேன்.
மாகாணத்தில்  வழங்கப்படும்  ஆசிரியர் நியமனங்கள் மட்டுமன்றி, சிற்றூழியர் நியமனங்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களின்போதும்,  குறித்த நியமனங்களைப்பெறுவோர் சிக்கல்கள் இன்றி சேவையாற்றுவதற்கான வகையில் அவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன்.
இலங்கையின் கேந்திர முக்கியத்துவமிக்க இடத்தில்  அமைந்துள்ள குருநாகல் மாவட்டம் என்பது மிக எளிதான முறையில் சுற்றுலாப் பயணிகளின்  வருகையைப் பெறக் கூடிய இடமாக அமைந்துள்ளது.
குருநாகல் மாவட்டத்தை மாத்திரமன்றி, புத்தளம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வடமேல் மாகாணத்திலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் புதிய  பொழுதுபோக்கு அம்சங்கள், புதிய பூங்காக்கள் அமைப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன்.
குருநாகல் மாவட்டத்தில்  காசநோய் பரவும் அபாயம் குறித்தும் அதிக கவனத்தை செலுத்தியுள்ளேன்.
காசநோயின் அபாயம் குறித்தும், அதன் பரவலைத்தடுப்பது குறித்தும் மாகாணம் முழுவதும் ஒரே நாளில்  விழிப்புணர்வு  செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன் என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *