வங்குரோத்து நிலையிலிருந்து நாடு, மீண்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்

Byadmin

May 10, 2024

சர்வதேச கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்றும் அப்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.எவ்வாறாயினும் நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற  இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் கீழ் 2348/48ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்,பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2340/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சகல சர்வதேச நாடுகளுடனும் பிளவுபடாத வெளிவிவகார கொள்கையுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதே அரசாங்கத்தில் எதிர்பார்ப்பாகும்.

தேசிய வளங்களைப் பாதுகாத்து, அதன் உச்ச பயனை பெற்றுக் கொள்வதற்கு பிளவடையாத வகையில்  வெளிவிவகார கொள்கையை செயற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஈரான்  ஜனாதிபதி அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அந்த வகையில் அவரது வருகையின் பின்னர் இலங்கையின் வெளிவிவகார கொள்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

உமா ஓயா அபிவிருத்தி செயற்திட்டத்தை ஈரான் ஜனாதிபதி திறந்து வைத்ததுடன் அந்த  திட்டத்தின் ஊடாக தேசிய மின்கட்டமைப்புக்கு 120 மெகாவோட் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நீர்மின் உற்பத்தி  நடவடிக்கைகள் விரிவு படுத்தப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஜூலை மாதமளவில் மின்கட்டணத்தை மேலும் குறைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டின் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். ஈரானுக்கும், இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்க ஈரானிய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதனூடாக இலங்கையின் சுற்றுலாத்துறை  கைத்தொழில் முன்னேற்றமடையும்.

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற ‘உலக பொருளாதார பேரவை’ மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் அந்நாட்டின் வெளிவிவகாரம், முதலீடு மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிந்தது. இதன் பிரதிபலனாக சவூதி  அரேபியாவுடன் ‘முதலீட்டு மேம்பாட்டு ஒப்பந்தம்’ ஒன்றை கைச்சாத்திட  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய வெளிவிவகா அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த வகையில் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் ஜப்பான் தலைமைத்துவம் வகிப்பது இலங்கைக்கு சாதகமாக காணப்படுகிறது.

கடன் மறுசீரமைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் எமக்கு உறுதியளித்துள்ளார். அத்துடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றதன் பின்னர்  இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்திட்ட ங்களை முன்னெடுக்க வேண்டும் என ஜப்பான் வலியுறுத்தியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *