ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள்

Byadmin

Apr 27, 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
2.74 மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அரிசி விநியோகிக்கப்படுகிறது.
தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி விநியோகம் பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெறுகின்றது.
இந்த அரிசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற போதிலும், தங்காலை, நெடோல்பிட்டிய, வெலிபென்ன, லலிதபுர ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பணம் கொடுத்து அரிசியை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர்.
அதன்படி, 20 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பல்வேறு தொகைகளில் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளரிடம் வினவியபோது, ​​மக்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த அரிசி தொகையை பாதுகாப்பதற்காக இருந்த காவலாளிக்கு பணம் கொடுப்பதற்காக மக்களிடம் பணம் வசூலித்து வழங்கப்பட்டமை குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, கந்தளாய் பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்குவதற்காக உத்தியோகபூர்வ நிழற்குடை கட்டிடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த அரசி தொகையில் 20 மூட்டை அரிசியை திருடி செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று (27) காலை குறித்த கட்டிடத்தின் ஜன்னல் திறந்து கிடப்பதைப் பார்த்த பிரதேசவாசி ஒருவர் கிராம அதிகாரி மற்றும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.
கந்தளாய் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அறையின் பிரதான கதவை உடைத்து உள்ளே நுழைந்து யாரும் அரிசியை திருடிச் சென்றிருக்கவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில்  தெரியவந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே ஹப்புத்தளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குறைந்த வருமானம் பெறுவோருக்கு நேற்று வழங்கப்பட்ட அரிசி பாவனைக்கு தகுதியற்றது என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த அரிசி அம்பாறை பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலையொன்றினால் வழங்கப்பட்டதாகவும், காலாவதியாகும் திகதிக்கு மேல் மேலும் ஒரு திகதி குறிப்பிட்டு லேபிள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
எனினும் ஹப்புத்தளை பிரதேச செயலகத்தின் தலையீட்டின் மூலம் காலாவதியான அரிசிக்கு பதிலாக பொருத்தமான அரிசியை வழங்குவதற்கு அரிசி விநியோகஸ்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *