சிகிரியாவை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்!

Byadmin

Apr 22, 2024

சிகிரியா மற்றும் தம்புள்ளையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிப்படைத் திட்டங்களை இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்குள் பூர்த்தி செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு 19 ஆம் திகதி பணிப்புரை விடுத்தார்.
இந்த திட்டத்தில் நகர்ப்புற வசதிகளை வழங்குவதற்காக நிதி அமைச்சு ஒரு குழுவையும் நியமித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிலையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2019 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டில் ஏற்பட்ட கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கான மொத்த செலவு 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். சிகிரியா, தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் அடையாளம் காணப்பட்ட இடங்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி இதன் கீழ் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பெருமளவு வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பல முக்கிய நோக்கங்கள் உள்ளன. சுற்றுலாத் துறைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை  மேம்படுத்தல்,  தொல்பொருள் நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் வருமானம் ஈட்டுதல் என்பதோடு  சுற்றுச்சூழல் முகாமைத்துவம்  ஆகியவை இதில் அடங்கும். சிகிரியா மற்றும் தம்புள்ளை நகரங்களில் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு உரிய  பங்குதாரர்களான நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
சிகிரியாவை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வது 8 உப திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.  அதாவது சிகிரியா புதிய கிராம வாகனத் தரிப்பிடம், சுகாதார வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் சிகிரியா குன்றின் நுழைவாயில் வரையான  பகுதியை அபிவிருத்தி செய்தல், பிதுரங்கல, மாபாகல தொல்பொருள் இடங்களை பாதுகாத்தல், கலுதிய குளத்தை அபிவிருத்தி செய்தல், ராமகெலே  முதல் பிதுரங்கல வரையான உரும மாவத்தையை அபிவிருத்தி செய்தல், சிகிரியா குளத்தை அபிவிருத்தி செய்தல், தகவல் தொடர்பு நிலையத்தை நிறுவுதல், இனாமலுவ குளத்தையும் கலேவல குளத்தையும் சூழ கீழ் கட்டுமான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், கழிவு முகாமைத்துவம் செய்யும் தொகுதி ஒன்றை அபிவிருத்தி செய்தல் என்பனவாகும்.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது சிகிரியா,  தம்புள்ளை மற்றும்   திருகோணமலை ஆகிய நகரங்களும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும் பிளாஸ்டிக் பாவனையற்ற சூழலுக்கு உகந்த சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்தப் பிரதேசங்களை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் போது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சிகிரியா, தம்புள்ளை திட்டத்திற்கு மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *