கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் டொக்டர் கிரிஷாந்த பெரேராவை தாக்கிய குற்றத்திற்காக இன்று காலை கைது செய்யப்பட்ட ஊழியர்கள் மூவரையும் ஜனவரி 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(செய்திப் பின்னணி)
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் டொக்டர் கிரிஷாந்த பெரேராவை தாக்கியதாக கூறப்படும் வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர் ஒருவரையும் ஊழியர் இருவரையும் காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வைத்தியர் கடந்த 17 ஆம் திகதி காலி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
52 வயதுடைய சுகாதார உதவியாளர் ஒருவரும், 45 மற்றும் 43 வயதுடைய உதவியாளர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பின் அடிப்படையில், கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஊழியர்களுக்கும், பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் டொக்டர் கிரிஷாந்த பெரேராவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அப்போது வைத்தியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கிரிஷாந்த பெரேரா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நாளை (22) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.