மோட்டார் சைக்களில் விபத்தில் பாடசாலை மாணவன் பலி!

Byadmin

Jan 18, 2024

மதுரங்குளி – விருதோடை , எள்ளுச்சேனை பகுதியில் நேற்றிரவு (17) இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளி – விருதோடையைச் சேர்ந்த கலீல் அஹ்மட் முஹம்மது எனும் 15 வயதுடைய மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
 விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த மாணவனே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிள், விருதோடை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றுடன், பின்னால் சென்று மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் , உயிரிழந்த மாணவனின் சடலம் மீதான மரண விசாரணையை நடத்தினார்.
அத்துடன், உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நல்லடக்கத்திற்காக அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் கூறினார்.
இதேவேளை, இளம் வயது பிள்ளைகளின் விடயத்தில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
வீதியில் அதிக வாகன நெரிசல்கள் காணப்படும் நிலையில், பாடசாலை செல்லும் வயதிலுள்ள பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லதாகும் என்றும் அவர் கூறினார்.
மேலும், ஓய்வு நேரங்களில் தமது இள வயது பிள்ளைகளை நண்பர்களுடன் வெளியே சுற்றித் திரிய அனுமதிப்பதற்கும் பொற்றோர்கள் இடமளிக்க கூடாது எனவும் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மேலும் குறிப்பிட்டார்.
இந்த விபத்துச் சம்மவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *