புத்தளத்தில் 4,340 பேர் பாதிப்பு!

Byadmin

Dec 16, 2023

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் வான் கதவுகள் திறக்கப்பட்டமை மற்றும் வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 31 கிராம சேவகர் பிரிவுகளில் 1229 குடும்பங்களைச் சேர்ந்த  4340 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வெள்ளம் காரணமாக இதுவரை 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் 11 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 741 குடும்பங்களைச் சேர்ந்த 2566 பேரும், கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 4 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 210 குடும்பங்களைச் சேர்ந்த 871 பேரும், வனாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் 3  கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 100 குடும்பங்களைச் சேர்ந்த 291 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நவகத்தேகம பிரதேச செயலாளர் பிரிவில் 4 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 18 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும், கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவில் 7 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 52 குடும்பங்களைச் சேர்ந்த 178 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 108 குடிம்பங்களைச் சேர்ந்த 378 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.

இங்கினிமிட்டிய, ராஜாங்கனை மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாகவும் மாவட்டத்திலுள்ள கால்வாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிவதாலும் பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்த நிலைமை படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.

முந்தல், புத்தளம் மற்றும் கற்பிட்டி, வென்னப்புவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளும், வெள்ளம் காரணமாக தமது வீட்டிலிருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, மூன்று நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வடைந்தமையால் வான் கதவுகள  திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், தப்போவ நீர்த்தேக்கத்தில் 18 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் 6 கதவுகள் 5 அடி உயரத்திலும், 12 வான் கதவுகள் தலா 2 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன. 

இதனால் குறித்த நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 6230 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது.

அத்துடன், இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 1 அடி உயரத்தில் 4 வான் கதவுகளும், 2 அடி உயரத்தில் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 4000 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது.

மேலும் ராஜாங்களை நீர்த்தேக்கத்தில் 12 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் குறித்த மூன்று நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி மேலும் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *