நமது பாடசாலை – நாமே பாதுகாப்போம்

Byadmin

Dec 11, 2023

மினுவாங்கொடை கல்விப் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு சோலார் பேனல்கள் பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 
      
மாதாந்தம் 20,000 ரூபாவிற்கும் அதிகமான மின்சாரக் கட்டணம் செலுத்தும் மினுவாங்கொடை கல்விப் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இத்திட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.   
மினுவாங்கொடை வலயக் கல்வி அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற மினுவாங்கொடை கல்விக் கட்டமைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.
மினுவாங்கொடை வலயத்தில் உயர் புலமைப்பரிசில் பெறுபேறுகளைப் பெற்ற 08 பாடசாலைகளின் அதிபர்களுக்கு சான்றிதழ்களும் இங்கு வழங்கி வைக்கப்பட்டன.
பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மினுவாங்கொடை கல்வி கோட்டத்தின் 35 பாடசாலைகளுக்காக உருவாக்கப்பட்ட பெருந்திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மகிந்த விதானாராச்சி அவர்கள் அதிபர்களிடம் வழங்கி வைத்தார்.
மினுவாங்கொடை கல்விப் கோட்டத்தில் 160 பாடசாலைகள் உள்ளன. அந்தப் பாடசாலைகளின் சிதிலமடைந்த பாடசாலைக் கட்டிடங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இதன்  முதற்கட்டமாக, இந்த 35 பாடசாலைகளுக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பட்டயப் பொறியாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்களின் தலையீட்டில் அனைத்து திட்டங்களும் உருவாக்கப்பட்டன.
இவ்வாறான பாரிய திட்டங்களை தனியார் துறையினர் முன்னெடுத்தால் அதற்கு 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக செலவாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
இவ்வளவு பெரிய தொகையை பாடசாலைகள் அல்லது வலயக் கல்வி அலுவலகம் பொறுப்பேற்பது கடினம் என்பதால், திட்டங்களை தயாரிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பட்டய பொறியாளர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்களை தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.
இந்த திட்டங்களின் அடிப்படையில் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி அமைய வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அங்கு அதிபர்களுக்கு அறிவித்தார்.
இத்திட்டங்கள் தொடர்பில் பாடசாலை அபிவிருத்திக் குழுக்கள், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை முகாமைத்துவக் குழுக்களுடன் அவர் ஆலோசனை வழங்கினார்.
மேலும், “நமது பாடசாலை – நாமே பாதுகாப்போம்” திட்டத்தின் கீழ், அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் 17 பாடசாலைகளுக்கு வர்ணம் பூசவும், சிறு புனரமைப்புகளைச்  செய்யவும் இங்கு பணம் வழங்கப்பட்டது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் நௌபர் பௌசிக்கு சொந்தமான சஹீதா பவுண்டேஷன் மினுவாங்கொடை பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்வந்துள்ளது. இந்த பவுண்டேஷனால் வழங்கப்பட்ட 100 இலட்சம் ரூபா 08 பாடசாலைகளின் அபிவிருத்திக்காக அதிபர்களுக்கு வழங்கப்பட்டது.
மினுவாங்கொடை வலயக் கல்விப் பிரிவில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் பூர்த்தி செய்யவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர்களிடம் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் கபில ரணராஜா பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானாராச்சி உட்பட மினுவாங்கொடை வலயப் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *