வீட்டு விநியோக முறையான ‘டோ டு டோ’ முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டினர் இம்முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன், குறித்த பொருட்கள் தனியார் சரக்கு போக்குவரத்து முகவர் நிலையங்கள் மூலம் நேரடியாக குறித்த நபர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
எவ்வாறாயினும், தொடர்ச்சியான பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கருத்திற்கொண்டு, “டோ டு டோ” விநியோக முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களுக்கு இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அதற்கு முன்னர் அனுப்பப்படும் பொருட்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், டிசம்பர் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களை இலங்கை சுங்கத்தின் சாதாரண சரக்கு முறையின் மூலம் இலங்கைக்கு அனுப்ப முடியும்.
இந்த முறைமையின் மூலம் சரக்கு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களை தவறான இடத்தில் வைப்பது, கொள்கலன்களை திறப்பது போன்ற தவறான செயல்கள் இலங்கை சுங்கத்தில் இடம்பெற்றுள்ளதாக சில தரப்பினர் குற்றம் சுமத்திய போதிலும், இவை இதனுடன் தொடர்புடைய இடைத்தரகர்களால் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த மூன்று நாட்களில், “டோ டு டோ” பொருட்கள் மற்றும் சேவை விநியோக முறையின் மூலம் சுமார் 20 கிலோகிராம் போதைப்பொருள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன், இது அந்த முறையை இடைநிறுத்துவதற்கு வழிவகுத்துள்ளது.
வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களினால் தற்போது போதைப்பொருள் விநியோகம் இந்த முறையின் ஊடாக இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் முறையான சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு உட்பட்டு அடுத்த வருடம் மீண்டும் குறித்த முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த தீர்மானத்தினால், இத்துறையில் பணியாற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் உட்பட பல தரப்பினர் கடும் நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் என ஐக்கிய பயண சரக்கு சேவை வழங்குநர்கள் சங்கத்தின் தலைவர் பண்டுக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டிற்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கட்டணச் சலுகைகளை அதிகரிப்பதற்கான முறைமையை தயாரிப்பதில் இலங்கை சுங்கம் மேலும் தவறியுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
டோ டு டோ’ முறை உடனடியாக இடைநிறுத்தம்
