தனியார் வாடகை செயலியை பயன்படுத்திய சாரதி மீது தாக்குதல்

Byadmin

Oct 31, 2023


யாழ்ப்பாணத்தில் தனியார் வாடகை செயலி ஊடாக தனக்கு கிடைக்கப்பெற்ற சேவையை அடுத்து சேவை பெறுநரை ஏற்ற சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது, தரிப்பிட சாரதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தாக்குதலுக்கு இலக்கான சாரதி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் இன்று (31) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் நின்று ஒருவர் தனியார் வாடகை செயலி ஊடாக முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். அதனை அடுத்து அவரை ஏற்றுவதற்காக குறித்த முச்சக்கர வண்டி அப்பகுதிக்கு வந்துள்ளது.

அதன் போது, அப்பகுதியில் தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபடுவோர், தரிப்பிடத்தில் நிற்கும் தமது முச்சக்கர வண்டியையே வாடகைக்கு அமர்த்த வேண்டும் என முரண்பட்டு, அங்கு வந்த முச்சக்கர வண்டி மீதும் நபர் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதனை அடுத்து பாதிக்கப்பட்ட சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ். நகரில் பேருந்து நிலையம், வைத்தியசாலை மற்றும் புகையிரத நிலையம் போன்ற பகுதிகளில் நிற்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் அதிக கட்டணங்களை அறவிட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர்.

அந்நிலையில் நீண்ட கால போராட்டத்தின் பின் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானிகளை பொறுத்துமாறும் அவ்வாறு பொறுத்தாத சாரதிகளை தரிப்பிடங்களில் நின்று சேவையில் ஈடுபட வேண்டாம் எனவும், மீறுபவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் யாழ். மாவட்ட செயலர் அறிவித்து இருந்தார்.

அதனை அடுத்து ஒரு சில சாரதிகள் கட்டண மானிகளை பொருத்தி இருந்தாலும், சேவையில் ஈடுபடும் போது மானி பழுதடைந்து விட்டது என பொய் கூறி அதிக கட்டணமே அறவிட்டு வந்தனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் தனியார் வாடகை செயலி தனது சேவையை அறிமுகப்படுத்தியதை அடுத்து மக்கள் பலரும் செயலியை பயன்படுத்த தொடங்கியமையால், தரிப்பிடத்தில் நின்று சேவையில் ஈடுபடும் தமக்கு பெரு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து வரும் நிலையில், இன்று குறித்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *