யாழில் விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடிகள்

Byadmin

Oct 22, 2023


விளையாட்டு செயலிகள் (apps) ஊடாக பணமோசடிகள் நடக்கின்றன என்றும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் விஷாந்த தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் இவ்வாறான பண மோசடிகளில் சிக்கிக் கொண்ட பலர் உள்ளனர். குறிப்பிட்ட விளையாட்டுச் செயலிகளில் இணைந்து கொள்வோர் அங்கு ஒரு சிலரைக் கொண்ட குழுவாக்கப்படுகின்றனர்.

அதில் இணையும்போது ஒரு சிறு தொகைப் பணம் அவர்களின் கணக்குக்கு வழங்கப்பட்டுச் சேர்க்கப்படுகின்றனர். அந்த குழுவில் அதிகளவானோர் இருப்பதாகவும் காட்டும்.

அதன்பின்னர் விளையாட்டின் ஒவ்வொரு படிநிலையின்போதும் ஒரு தொகைப் பணத்தைச் செலுத்த வேண்டும். அதில் சிறு தொகை உடனடியாகவே மீளவும் விளையோடுவோரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

தொடக்கத்திலே விளையாடுபவர் முதலில் வெற்றி பெறுவார்.

அதனால் ஏற்படும் நம்பிக்கையால் மீண்டும் மீண்டும் பணம் செலுத்தி விளையாடத் தூண்டப்படுகின்றனர். விளையாட்டின் ஒவ்வொரு படிநிலையின்போதும் செலுத்த வேண்டிய தொகை அதிகரித்துச் செல்லும்.

இது இலட்சங்களை எட்டும்போதும் கணக்கில் சிறியளவு தொகை வரவு வைக்கப்படும். உதாரணமாக 40 இலட்சம் ரூபா ஒருவர் செலுத்தினால் அவரது கணக்கில் சில லட்சங்கள் உடனடியாக வரவு வைக்கப்படும்.

விளையாட்டில் வெற்றிபெற்றால் வெற்றித் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படும். பெருந்தொகையை வைப்பிலிடும் சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் படிமுறைகளை நிறைவேற்றவில்லை என்று கூறி ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டுக் குழுவில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

இதை நம்பிப் பெருந்தொகையான பணத்தைச் செலுத்தும் பலர் பணத்தை இழந்துள்ளனர்.

இது தொடர்பாக எவர் மீதும் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய முடியாத நிலைமையே காணப்படுகின்றது. அந்தக் குழுவில் உள்ளவர்களிடையே பணம் பரிமாற்றப்பட்டு, ஒரு சங்கிலித் தொடராக இது மேற்கொள்வதால் இறுதியில் பணத்தைப் பெற்றுக்கொள்வது யார் என்பதைக் கண்டுபிடிப்பதும் கடினமானது.

ஆகையால் இவ்வாறான விளையாட்டுச் செயலிகள் மூலம் நடக்கும் பண மோசடி தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

இந்தப் பண மோசடியில் சிக்கிய பலர் உள்ளபோதும் அவர்களால் முறைப்பாடு செய்ய முடிவதில்லை. யாருக்கு எதிராக முறைப்பாடு செய்வது என்ற சிக்கலாலேயே பலர் இது தொடர்பில் மௌனமாக இருக்கின்றனர்.

பல்வேறு தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்தலின் பின்னணியில் இவ்வாறான மோசடிகளும் உள்ளன. இவ்வாறான செயலிகளை மக்கள் உபயோகப்படுத்தாது தவிர்த்தலே புத்திசாலித்தமானது என்றும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *