அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் எச்சரிக்கை

ByEditor 2

Jan 15, 2025

கறுப்புப்பட்டியலில் உள்ள பங்களாதேஷ் நிறுவனமொன்றுக்கு இலங்கையில் மருந்து விநியோக டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் பரப்புவோருக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SPC) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, chlorhexidine 0.2% மருந்து வழங்குவதற்கான டெண்டர், இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் கோரப்பட்ட நிலையில், குறைந்த விலைமனுக்களை சமர்ப்பித்த நிறுவனமொன்றுக்கு டெண்டர் வழங்கப்பட்டிருந்தது.

விரைவில் சட்ட நடவடிக்கை

அதன்பின் மேற்கொள்ளப்பட்ட பின் ஆய்வுகளின் போது குறித்த நிறுவனம் பணக் கொடுக்கல் வாங்கல் விடயத்தில் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

அதனையடுத்து அதற்கான டெண்டர் ரத்துச் செய்யப்பட்டு, அதற்கடுத்த நிலையில் குறைந்த விலைமனுக்களை சமர்ப்பித்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டு விட்டது.

இந்தவிடயம் ஊடகங்களில் வெளிவர முன்னரே முதலாவது நிறுவனத்தின் டெண்டர் இரத்துச் செய்யப்பட்டு, இரண்டாவது நிறுவனத்துக்கு குறித்த டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் கறுப்புப் பட்டியலில் உள்ள நிறுவனமொன்றுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பொய்யான தகவல் ஒன்று பரப்பப்படுகின்றது.

குறித்த தகவலைப் பரப்புவோருக்கும், அதனை பிரசுரிக்கும் ஊடகங்களுக்கும் எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மருத்துவர் மனுப் கிரிசாந்த வீரசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *